Trial of Hein (2026,Germany) பெர்லின் 2026 | Film Intro By Tamil | யார் நீ? அடையாளத்தின் மீதான விசாரணை

பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மனிதன் தனது சொந்த கிராமத்துக்குத் திரும்புகிறான். ஆனால் அந்த கிராம மக்கள் அவனை அடையாளம் காணவில்லை. ஆனால் இந்த எளிய நிகழ்வின் பின்னால், நினைவின் நம்பகத்தன்மை, சமூகத்தின் அடையாள அரசியல், அந்நியரை நோக்கும் மனித மனத்தின் சந்தேகம் போன்ற பல அடுக்குகள் மறைந்திருக்கின்றன. 

சரி தற்போது நீங்கள் 2026 ல் வசிக்கவில்லை ஒரு 1800 ன்னு வச்சுக்குவோம்  சரியாக அதிலிருந்து ஒரு 14 வருடத்திற்கு முன்பு நீங்கள் உங்கள் ஊரிலிருந்து வெளியூருக்கு படிப்புக்காக சென்று விடுகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். திரும்பி உங்கள் கிராமத்திற்கு வருகிறீர்கள் அங்குள்ள யாருக்குமே உங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இப்போது ஊரே ஒன்றுகூடி உங்களை நீங்கள் தான் அந்த நபர் அப்போது ஊரை விட்டு சென்றவர் இப்போது வந்தது நீங்கள் தான் என சரியாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம். உங்களுடைய நினைவுகளை சரியாக சொன்னால் மட்டுமே உங்களால் அங்கு அடுத்த வாழ்க்கையை தொடர முடியும். இப்ப உங்களின் 14 வருட நினைவுகள் சரியாக இருக்கும் என நம்புகிறீர்களா?  இதே பிரச்னை தான்  ஹைன் க்கும் அவன்  மீதான அடையாளத்தின் விசாரணையே இந்த 2 மணி நேர திரைப்படம். 



உலக சினிமாக்களில் தந்தையை தேடி பயணம், தாயை தேடி, குடும்பத்தை தேடி, உறவுகளை தேடி, மனைவியை தேடி குழந்தையை தேடி என எக்கச்சக்கமான படங்கள் உள்ளன. ஆனால் ஒரு சில படங்கள் விதிவிலக்காக சற்று வேறுமாதிரியாக நகரும். நினைவுகளின் மாயை, சமூகத்தின் சந்தேகம், மனிதன் தனக்காக தேடும் உலகம்  இப்படி  பல்வேறு வகையான படங்கள் உள்ளன.  சில படங்கள் கதையைக் கூறுகின்றன. சில படங்கள் கேள்விகளை எழுப்புகின்றன. ஆனால் சில அரிய படங்கள் மட்டும் மனித வாழ்வின் ஆழமான கேள்விகளை சினிமா என்ற கலை வடிவத்தின் மூலம் நமக்கு முன்வைக்கின்றன. 2026 ஆம் ஆண்டு Berlin International Film Festival விழாவில் திரையிடப்பட்ட Trial of Hein என்ற ஜெர்மன் திரைப்படம் அவ்வாறான ஒன்றாகும். இது வெளிப்படையாகப் பார்க்கும்போது ஒரு எளிய கதையாகத் தோன்றலாம்.



திரைப்படத்திற்கு வருவோம்.

ஒரு மனிதன், ஒரு கிராமம், ஒரு விசாரணை பிறகு முடிவென்ன? இந்தப் படத்தின் மையக் கதாபாத்திரம் ஹைன். இந்த பாத்திரத்தில் நடித்தவர் ஜெர்மன் நடிகர் Paul Boche. ஹைன் தனது இளமைக் காலத்தில் வடக்குக் கடலில் உள்ள ஒரு சிறிய தீவுக் கிராமத்தில் வாழ்ந்தவன் , அங்கே மீன்பிடி தொழில் தான் அனைவர்க்கும் முக்கிய தொழில். அந்தக் கிராமத்தில் வாழ்க்கை மிகவும் எளிமையானது. பழைய மரபுகளும் பழக்கவழக்கங்களும் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் ஒரு மூடப்பட்ட சமூக அமைப்பு அங்கே நிலவுகிறது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ஹைன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறான். காலம் செல்லச் செல்ல அந்த இடம் அவனுடைய நினைவுகளில் ஒரு தூரக் கனவாக மாறிவிடுகிறது. 

பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருநாள் அவன் மீண்டும் அந்தத் தீவுக்கு திரும்புகிறான். மொத்தமாய் க்ளீன் சேவ் செய்து பார்க்க வெளிநாட்டு காரன் மாதிரி. அங்குள்ளவர்கள் தாடி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.“நீ யார்?” ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களின்  கேள்வி மொத்தமே ஒரு 30 பேர் தான் வசிப்பார்கள் என நினைக்கிறன்.  ஹைன் திரும்பி வந்தவுடன் நிகழ்வுகள் எதிர்பாராத திசையில் நகர்கின்றன. அந்த கிராம மக்கள் அவனை அடையாளம் காணவில்லை. அவன் நான் தான் ஹைன் என்று கூறுகிறான். ஆனால் அவர்களுக்கு அது நம்பிக்கைக்குரியதாகத் தோன்றவில்லை. அவன் சகோதரி கூட அவனை அடையாளம் காண முடியவில்லை. அவன் தாய் நினைவிழப்பு வயதுமூப்பு காரணமாக தெளிவாக பேச முடியாத நிலையில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் இறந்தும் போகிறார் அவன் தாய். அவன் சிறுவயது நண்பன் ஒருவன் இருக்கிறான் அவனும் இவனை நம்பவில்லை  ஊர்மக்கள்  கூட சந்தேகப்படுகின்றனர். சில டாஸ்க்குகள் வைத்தும் இவனை அவன்தான் என உறுதிப்படுத்த முடியவில்லை. 

இதனால் கிராம மக்கள் ஒரு விசித்திரமான தீர்வை முன்வைக்கிறார்கள் அது என்னன்னா?  “இந்த மனிதன் உண்மையில் ஹைன் தானா என்பதை விசாரணை மூலம் தீர்மானிக்க வேண்டும்.” அவ்வாறு ஒரு கிராம நீதிமன்றம் அமைக்கப்படுகிறது. நினைவுகளின் நீதிமன்றம் இந்த விசாரணையின் நோக்கம் மிக எளிமையானது போல தோன்றுகிறது. ஹைன் தனது கடந்தகாலத்தைப் பற்றி கூற வேண்டும். கிராம மக்கள் தங்கள் நினைவுகளுடன் அதை ஒப்பிட வேண்டும். ஆனால் இங்கே ஒரு பெரிய பிரச்சினை உருவாகிறது. ஒவ்வொருவரும் கடந்தகாலத்தை வெவ்வேறு விதமாக நினைவில் வைத்திருக்கிறார்கள். 

விருமாண்டி படத்துல வர ரஷோமோன் Effect மாதிரி ஒரே நிகழ்வை பலர் பல விதமாகச் சொல்வார்கள் இல்லையா. ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் உண்மையை உருவாக்கிக் கொள்வார்கள். Trial of Hein திரைப்படமும்  அந்த மாதிரி நகருது. ஒரே கேள்வியை மீண்டும் இவர்களுக்குள் எழுப்புகிறது. ஆளுக்கொரு கதை. ஒரே நிகழ்வு ஒருவருக்கு ஒரு நினைவாகவும், மற்றொருவருக்கு வேறொரு நினைவாகவும் இருக்கிறது. இதனால் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. நினைவு உண்மையா? எல்லாம் சரியா என? 

ஒரு நிமிஷம். எனக்கும் இவ்ளோ நேரம் அந்த கதையோட பயணம் செய்ததால் ஒரு விஷயத்தை கவனிக்காம விட்டேன் ஆமாம் அங்குள்ள எந்த வீட்டிலும் கூரை மற்ற சுவர்கள் இல்லையே என்ன காரணம்???

பிரபு கவுண்டமணி காமெடி ஒன்று இருக்கிறது பெரிய தம்பி படத்தில். கவுண்டமணி வீட்டில் தங்க போகும் பிரபுவுக்கு ஒரு அதிர்ச்சி ஒரே ஒரு சுவர் மட்டுமே கொண்ட வீட்டை கட்டி கதவை வைத்துவிட்டு இதுதான் வீடு இது உள்ளே வெளியே இனிமே தான் ஒவ்வொன்றாக கட்டி முடிக்க வேண்டும் இப்ப சொல்லு நீ உள்ள படுத்துகிறாயா இல்லை வெளியவா என கேர்ப்பார்.  இதை பார்க்கவும் எனக்கு அந்த காமெடி நினைவுக்கு வந்துச்சி. 

இங்கே கிராம வீடுகள் முழுமையாக கட்டப்பட்ட கட்டிடங்களாக இல்லை. சில சுவர்கள் மட்டும் உள்ளன.கூரைகள் இல்லை. இது ஒரு பிரச்னையாக நமக்கு தெரியாது ஒரு மினிமலிஸ்ட் திரைப்படமாக்கல் யுக்தி போல ஏற்கனவே இதுபோல சினிமாவில் நடந்துள்ளது சினிமா வரலாற்றில் புகழ்பெற்ற Dogville திரைப்படத்தை நினைவூட்டுகிறது. அந்தப் படத்தில் கூட வீடுகள் சுவர்களால் அல்ல இந்த வகையான அமைப்பின் நோக்கம் யதார்த்தத்தை உருவாக்க வா இல்லை செலவை குறைக்கவா என தெரியவில்லை ஆனால் நன்றாக இருந்தது.

அப்படியே கதைக்கு போயிடுவோம். எங்க விட்டோம் ஆ விசாரணை!

ஹைன் அந்த கிராமத்தில் பிறந்தவன் என்றாலும், அவன் பல ஆண்டுகள் வெளியே வாழ்ந்ததால் இப்போது அந்நியனாகவே கருதப்படுகிறான். இதுவே இந்தப் படத்தின் முக்கியமான சமூக கருத்தாக மாறுகிறது. 

அவன் சிறுவயது நண்பன் ஃப்ரீடெமன் மற்றும் கிரெட்டா என்ற பெண் ஆகியோருடன் தொடர்புடைய ஒரு உணர்ச்சி நிறைந்த கடந்தகாலம் அவனுடைய வாழ்க்கையை வடிவமைத்திருக்கிறது. ஆனால் அதை பற்றி அவன் யாரிடமும் சொல்லவில்லை என்பது மட்டும் புரிகிறது. இப்ப இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கிடையே இருந்த உறவு தான் இந்தக் கதையின் உண்மையான உணர்ச்சி மையமாக மாறுகிறது. அந்த பெண்ணுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கு , அவன் நண்பனுக்கும் ஆயிடுச்சி போல. இப்ப விசாரணை தொடங்குகிறது. முடிவில் அவன்தான்  ஹைன் ஆ என்பதை இல்லை எல்லாம் பொய்யா ? மற்ற எல்லாவற்றையும் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

படத்தின் ஒளிப்பதிவு அட்டகாசம் நிறைய டாப் ஆங்கிள் ட்ரோன் ஷாட்கள். புல்வெளி நிலப்பரப்பு மலைகள் கடல் எல்லாம் நன்றாக இருந்தது. நடித்திருந்தவர்களும் சிறப்பு எடிட்டிங் உம் சிறப்பு. தனித்துவமான சில  காட்சியமைப்புகளை கொண்டது மிகவும் அமைதியான ஆனால் ஆழமான சினிமா. இணையத்தில் தேடினால்  சில விமர்சகர்கள் இந்தப் படத்தை விமர்சித்தும் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் கூறியது படம் மிகவும் மெதுவாக நகர்கிறது சில காட்சிகள் தேவையற்ற நீளமாக இருக்கிறது. இது எல்லாம் உலக சினிமாவில் இயல்பு இதே போல பெஸ்டிவலில் நேரம் அதிகமா தூங்கியவர்கள் சிலரை பார்த்துள்ளேன். 

எனக்கு ஒரு மதிய வேலை குல தெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உறங்கையில் ஒரு கனவு வந்தது அந்த கனவில் நான் வேறொரு வீட்டில் வசிக்கிறேன் அங்கே எனக்காய் ஓர் குடும்பம் இருக்கிறது அப்படி அதற்க்கப்புறம் நடந்த சம்பவங்கள் மறந்துவிட்டேன்.  இன்னும் சுவாரஸ்யமாய் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் கூட மம்முட்டி கேரளா லிருந்து  வேளாங்கன்னி சர்ச் க்கு போயிட்டு வீட்டு போற வழில திடீர்ன்னு ஒரு கிராமத்துக்கு போய் ஒரு வீட்டுக்குள்ள சட்டையை போட்டுக்கிட்டு அவங்க வேண்டிய எடுத்துக்கிட்டு ட்ராவல் பண்ண கிளம்பி விடுவார். அந்த ஊர் மக்களும் யார் இவர் ன்னு புலம்புவார்கள் ஆனால் பெரிதாய் கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனான் இந்த ஜெர்மனி படத்தில் நாயனுக்கு பல கேள்விகள் அடுக்கடுக்காய் வைப்பார்கள். 

இந்த கதையின் உணர்ச்சி வலிமை யாக தோன்றியது.  சில நேரங்களில் குறைவாகத் தோன்றுகிறது அமைதியான சினிமா இந்தப் படம் வேகமான கதையோ அல்லது அதிரடி திருப்பங்களோ கொண்ட படம் அல்ல. என்பதை உறுதியாக சொல்லிவிடுகிறேன்.

இப்போதைக்கு இந்தப்படம் எந்த OTT யிலும் இல்லை பெஸ்டிவல் மட்டுமே காண முடியும் வாய்ப்பிருந்தால் வருகின்ற திரைப்படவிழாவில் காணுங்கள். 

சரி உங்களுக்கு ஒரு கேள்வி  அடையாளம் என்றால் என்ன? இந்தப் படம் எழுப்பும் மிக முக்கியமான கேள்வி இதுதான். ஒரு மனிதனின் வீடு அவனுக்கான  அடையாளம் என்றால் என்ன? அவன் பிறந்த இடமா? அவன் வளர்ந்த சமூகமா? அல்லது அவன் உண்மையாக இருக்க முடியும் இடமா? அவன் விரும்பும் இடமா? 


 இது மெதுவாக நகரும் சினிமா. அதன் பலம் அதன் அமைதியில்தான் உள்ளது. ஒவ்வொரு காட்சியும் ஒரு கேள்வியை எழுப்புகிறது. ஒவ்வொரு உரையாடலும் ஒரு உணர்வை வெளிப்படுத்துகிறது. ஒரு மனிதன் – இரண்டு உலகங்கள் ஹைன் இரண்டு உலகங்களுக்கிடையே சிக்கிய மனிதன். ஒரு உலகம் அவன் நினைவுகளில் இருக்கும் கடந்தகாலம். மற்றொரு உலகம் அவன் திரும்பி வந்த நிகழ்காலம். இந்த இரண்டு உலகங்களும் ஒன்றோடொன்று பொருந்தவில்லை. அதனால் அவன் ஒரு இடத்தில் கூட முழுமையாக சேர்ந்தவன் போல உணர முடியவில்லை.




பெர்லினாலே விழா உலக சினிமாவில் புதிய குரல்களை அறிமுகப்படுத்துவதில் மிகப் பிரபலம். அந்த விழாவின் Perspectives பிரிவில் இந்தப் படம் திரையிடப்பட்டது என்பது, இயக்குநர் Kai Stänicke-க்கு ஒரு முக்கியமான அறிமுகமாக அமைந்தது. இது அவரது முதல் முழுநீள திரைப்படம். விமர்சகர்களின் கருத்துகள் இந்தப் படம் விமர்சகர்களிடையே கலவையான கருத்துகளை பெற்றது. சில விமர்சகர்கள் இந்தப் படத்தை மிகவும் பாராட்டினர். அவர்கள் கூறியது: இது மனித அடையாளத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்க வைக்கும் படம் காட்சியமைப்பு மிகவும் தனித்துவமானது.


அமைதியான அதே நேரத்தில் ஒரு வலுவான சினிமா ஆனால் சில உலக சினிமா விமர்சகர்கள் இதை விமர்சித்தும் உள்ளனர். அவர்கள் கூறியது: படம் மிகவும் மெதுவாக நகர்கிறது சில காட்சிகள் நீளமாகத் தோன்றுகின்றன உணர்ச்சி வலிமை சில இடங்களில் குறைவாக இருக்கிறது , இப்படி பல்வேறு கருத்துக்கள் அவரர் பக்கம் எனக்கு பிடித்தது. வாய்ப்பிருந்தால் பாருங்கள். 

Trailer -




Post a Comment

Previous Post Next Post