Members of the Problematic Family (2026, India) | Berlin 2026 | Film Intro By Tamil | “சாம்பல்… நம் காலத்தின் நிறம்.”

ஒரு மனிதன் ஏற்கனவே இறந்துவிட்டான். உரியவரின் வீட்டிற்கு அவனது உடல் எடுத்துவரப்படுகிறது பின்பு சுற்றி குடும்ப உறவினர்கள் நிற்கிறார்கள்.  அவர்களது சோகத்துக்கும் நிம்மதிக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு. யார் கண்ணிலும் அவ்வளவு கண்ணீர் இல்லை. அட யாராவது அழுவுங்கப்பா என்ற குரலும் ஒலித்தது. இந்த படம் ஒரு மனிதனின் மொத்த  வாழ்க்கையை சொல்லவில்லை. அவர் முன் பின் காட்சிகளை நகர்த்தல் மூலம் ஒரு சிக்கலான குடும்ப உறுப்பினர்களின்  ஒன்னொமுக்கால் மணி நேர பயணம்.  

இந்தப்படம் என் வாழ்க்கையின் ஒரு மறைந்த பக்கத்தை மீண்டும் எனக்கு திறந்து காட்டியது அதை பற்றி முடிவில் சொல்கிறேன்.


ஆரம்பத்தில்  ஒரு funeral. அதை சுற்றி நகரும் அத்தியாயங்கள். அந்த அத்தியாயங்களுக்குள் சின்ன சின்ன உரையாடல்கள். இப்படி நகர்கிறது கதை. ஒரு புதிய இயக்குனர் கெளதம் நல்ல முயற்சி  முதல் படி எடுத்துவைப்போருக்கு அதுவும் சர்வதேச அரங்கில் கூடுதல் வாழ்த்துக்கள்.
Members of the Problematic Family பெர்லினாலே திரைப்பட விழாவின் Forum பிரிவில் திரையிடப்பட்ட இந்த தமிழ் படத்தை சமீபத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 

சென்னையின் புறநகர் எல்லையில் நடக்கும் கதை ,  நீர்நிலைகள் சூழ்ந்த இடம் . முழுமையான கிராமம் போலவும் தெரியவில்லை நகரம் போலவும் தெரியவில்லை ரெண்டும் கலந்த வாழ்க்கை. இந்த குடும்பம் ஒரு சாதாரண குடும்பம். ஆனால் அவர்களுக்குள் பேசப்படாத பல வருடங்களின் அழுத்தம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது. கணவன் இறந்துவிட்டார்,, சாராய கடை சித்தப்பா , வீட்டிலொரு தாத்தா அப்புறம் எல்லாருக்கும் பிடிக்காத  பிரபா. 

அந்தப்பையன் தான் ஆரம்பத்தில் இறந்துவிட்டான். நமக்கு காட்டப்பட்டதெல்லாம்  அவன் மதுவுக்கு அடிமை. அவன் குடும்பத்துக்கு அடிக்கடி சிக்கல்கள் உண்டாக்கியவன். தாத்தா முதல் சித்தப்பா தொடர்ந்து சில்வண்டு வரை வெறுக்கப்பட்டவன் சேட்டைக்கார பைய்யன் , தீடிரென கத்துவான், அந்த வீட்டில் ஒரு பீடை , சனியன் செத்து போ இப்படித்தான் நமக்கு காட்டினார்கள் . 

பிரபா இல்லாதபோதும், அவர் தான் இந்த குடும்பத்தின் invisible centre ஆக இருக்கிறார். எல்லோரும் தனித்தனியாக வாழும் மனிதர்கள் போல தோன்றினாலும், அவர்களை ஒன்றாகக் கட்டி நிறுத்தும் ஒரு கயிறு போல பிரபாவின் நினைவு செயல்படுகிறது. ஒருவர் அவனைப் பற்றி நல்லவன் என்று பேசுகிறார். இன்னொருவர் அவன் குடும்பத்துக்கு சிக்கல் என்று குற்றம் சாட்டுகிறார். அவன் நல்ல விளையாட்டு வீரராக மாற வாய்ப்பு இருந்தவன். அவன் மனநிலையில் ஒரு குழப்பம் இருந்திருக்கலாம் என்று சிலர் பேசுகிறார்கள். ஆனால் அவன் எப்படி இறந்தான் என்பதை திரைப்படம் தெளிவாக சொல்லவில்லை. Suicide ஆ? Accident ஆ? Alcohol overdose ஆ? கொலை யா ? இதை எல்லாம் விசாரணைக்கு உற்படுத்தும் கதை  அல்ல. ஒரு சம்பவம் அதனை தொடர்ந்து நடப்பவை.என்ன நடந்தது என்பதே முழுப்படம்.

ஒரு மனிதன் இறந்த பிறகு அவரது மரண காரணத்தை விட அவரைச் சுற்றி வாழும் மனிதர்களின் உணர்ச்சிகளே முக்கியம் என்று இயக்குனர் நினைத்திருக்கிறார் போல. இந்த குடும்பத்தில் தாய் சாந்தி ஒரு silent grief ஆக நிற்கிறாள். உறவினர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்கிறார்கள். சிலருக்கு சோகத்தை விட relief தா ஒரு பெருமூச்சாக  இருக்கிறது. வீட்டில் ஒரு ஆள் எல்லோருக்கும் பிரச்சனையாக  இருந்தால் அவர் இல்லாதபோது ஒரு வெற்றிடமும் ஒரு நிம்மதியும் இரண்டும் சேர்ந்து உருவாகும். இந்த படத்தில் அதுதான் நடக்கிறது. மரணத்துக்குப் பிறகு நடக்கும் பதினாறு நாள் சடங்குகள் . யார் யாருக்கு என்ன உறவு என்பது கூட தெளிவாக சொல்லப்படாது. விருந்துக்காக ஆடு அறுக்கப்படுவது, உறவினர்கள் சண்டையிடுவது, குடிப்பது, சிரிப்பது, ஆடுவது பாடுவது  இவை அனைத்தும் துக்கத்தை மறைக்கும் சமூக நிகழ்வுகளாக காட்டப்படுகிறது. 

ஒரு மனிதன் இறப்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டும் நடக்காது. அது ஒரு உலக அனுபவம். ஒரு குடும்பம் மரணத்தை எதிர்கொள்ளும் போது அவர்கள் பேசும் மொழி மாறினாலும், அவர்கள் உணரும் பயம், குற்ற உணர்வு, தனிமை இவை ஒரே மாதிரி தான் இருக்கும். எனக்கு சில படங்கள் நினைவுக்கு வந்தன.

பனாமாவின் Birthday Boy கடற்கரையில் நண்பர்கள் மத்தியில் பிறந்த நாளான இன்று தான் மரணிக்கவும் போகிறேன் என தன் இறப்பை அறிவிக்கும் மனிதனின் நடுக்கமும், சுவிஸ் A Piece of Sky மலைகளின் அமைதியில் தனது உயிர் உடலை விட்டு  விலகும் தருணத்தை உணரும் மனிதனின் குழப்பமும், குரோஷிய  Safe Place  நகரத்தின் சின்ன அறையில் தற்கொலை முயற்சிக்குப் பிறகு உயிரைப் பிடித்து நிற்கும் குடும்பத்தின் அச்சமும், மராத்தி Godavari  நதிக்கரையில் தலைமுறை நினைவுகளோடு மரணத்தை எதிர்கொள்ளும் மனிதனின் சோகமும்  ஒரே உண்மையை நினைவூட்டுகின்றன. மரணம் எப்போதும் ஒரு முடிவு அல்ல. அது ஒரு நீண்ட உணர்ச்சி நிலையின் தொடக்கம். இந்த திரைப்படங்களின் வழியாக உலக சினிமா மெதுவாக சொல்லிக் கொண்டே இருக்கிறது  மனிதன் வாழ்வதை விட மரணத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பதில் தான் அதிகம் நேரம் செலவிடுகிறான். 


இயக்குனர் தனது படத்தின் end credits-ல் உலக இலக்கியமும் சினிமாவும் கொண்ட விருப்ப பட்டியலை பகிர்ந்து நன்றியையும் தெரிவிக்கிறார்..
அதில் நினைவிருப்பவை சில டால்ஸ்டாய் எழுதிய The Death of Ivan Ilyich, குரோசாவாவின் Ikiru,  Aadukalam , அப்புறம் குறிப்பா ஓர் பாடல் மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது .  நாகூர் ஹனீஃபாவின் பாடல். சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே.

ஒரு குடும்பம் என்றால் அன்பு மட்டுமா? ஒருவரை நாம் உயிரோடு இருக்கும் போது புரிந்து கொள்ள முடியாமல் போவது ஏன்? அவர் இல்லாதபோது தான் அவரின் அர்த்தம் தெளிவாகிறது என்பதே மனித வாழ்க்கையின் மிகப் பெரிய சிக்கலா? இப்படிப்பட்ட கேள்விகளை படம் அமைதியாக நம்முள் விதைக்கிறது.  சினிமா பலருக்கு ஒரு பொழுதுபோக்கு. ஆனால் சிலருக்கு அது ஒரு கண்ணாடி என எங்கோ கேட்டிருக்கிறேன்.

இந்த திரைப்படம் ஒரு இளம் மதுக்காரனின் மரணத்தையும் அவன் மீது வெறுப்பையும் வைத்து ஒரு குடும்பமே இருந்தல்லவா. அதே போல  நிச்சயம் இப்படி ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வாய்ப்புண்டு எங்கள் வீட்டில் இருந்தது சொன்னேன் ல ஆரம்பத்துல , இந்த படத்தின் மையக் கதாபாத்திரமான பிரபா எனக்கு ஒரு கற்பனை மனிதராக தோன்றவில்லை. என் குழந்தைப் பருவத்தில் வாழ்ந்த என் பெரியப்பாவை நினைவுபடுத்தும் ஒரு உயிருள்ள உருவமாகவே தோன்றினார். என் பெரியப்பா ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், கணக்கு போடும் திறமை மற்றும் புத்திசாலித்தனம் காரணமாக குடும்பத்தில் தனித்த அடையாளம் பெற்றவர்.  ஐந்து பெண்களும் இரண்டு ஆண்களும் இருந்த குடும்பத்தில் அவர் மட்டுமே ஐந்தாம் வகுப்பு வரை  கல்வி கற்றவர். 

ஆனால் வாழ்க்கையின் ஓட்டத்தில் சேர்க்கைகளின் வழிதவறலில் அவர் மதுவுக்கு அடிமையாகி அந்த இருளில் தொலைந்து போனவர், குடும்பத்தாரின் அன்பையும் மரியாதையையும் இழந்தார். ஒரு “பிரச்சனை மனிதர்” என்ற முத்திரை அவர்மீது பதிந்துவிட்டது. தண்ணி வண்டி, மொடாக்குடி காரன், குடியிலே மிதப்பவன் என எல்லா பட்டமும் காற்றில் பறந்தது. போதையில் கத்திகொண்டே விடிய விடிய உளறிக்கொண்டே இருப்பார். ஒரு நாள் போதையில் காட்டில் விழுந்திருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் அவர் கடுமையாக காயமடைந்து, உயிருக்கும் மரணத்துக்கும் இடையில் இருந்தார், மருத்துவமனையில் உயிருக்கு போராடியபின் இறந்தார். அதன்பின் நடந்த சடங்குகள், வீட்டின் துக்கமான சூழல் , சொந்தபந்தங்கள் கூடல் என் மனதில்  காட்சிகளாக தெரிந்தன மீண்டும் இந்த படத்தை பார்த்தபின்பு .  
 

ஒரு மனிதனை முழுவதுமாக மதிப்பிடுவது அவனது தவறுகளின் அடிப்படையில் மட்டும் அல்ல. அவன் வாழ்ந்த சூழல், அவன் சந்தித்த தனிமை, அவனுக்குக் கிடைக்காத புரிதல் இவை அனைத்தும் சேர்ந்து அவனை உருவாக்குகின்றன. என் பெரியப்பா பற்றிய நினைவுகளும், இந்த திரைப்படம் கொடுத்த அனுபவமும் ஒன்றோடொன்று கலந்தது.


அடுத்த படத்தில் சந்திக்கலாம் இந்த திரைப்படம் இப்போது எங்கும் காண கிடைக்காது. சென்னையில் திரையிட வாய்ப்புள்ளது வாய்ப்பிருந்தால் கிடைத்தால்  ஒரு முறை காணுங்கள். 

நன்றி 



Post a Comment

Previous Post Next Post