21 ஆம் நூற்றாண்டின் திரைமொழி - லட்சுமிஹர் - உலக சினிமா கட்டுரைகள் புத்தகம் - யாவரும் பப்ளிஷர்ஸ்

சமீபத்தில் லட்சுமிஹர்  எழுதிய '21 ஆம் நூற்றாண்டின் திரைமொழி' (யாவரும் பதிப்பகம்) புத்தகத்தை முன்வெளியீட்டு திட்டத்தில் நல்ல தள்ளுபடி விலையில் வாங்கி படித்துக்கொண்டு இருக்கிறேன் , ஆஹா மொத்தம் 30 படங்கள் நல்ல தேர்வுகள் . ஒரு சில படங்களை தவிர மீதி எல்லாமே சமீபத்திய வெளியீடுகள் பார்க்க வேண்டிய படங்களாக இருக்கிறது, சமீபத்திய சினிமா விரும்பிகளானாலும் சரி சீனியர் சினிமா விரும்பிகள் ஆக இருந்தாலும் சரி வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் நல்ல புத்தகம்.

தற்போது நான் வாங்கிய அதே விலையில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. விருப்பமுள்ளவர்கள் யாவரும் பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு விசாரிக்கலாம்.



உலக சினிமா பற்றிய கட்டுரைத் தொகுப்புகள் இன்று நிறைய வெளிவருகின்றன. ஆனால் அவற்றில் அனைத்தும் ஒரே மாதிரி இல்லை. ஒவோன்றும் ஒரு தனித்துவத்தை பெற்றிருக்கும். பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒன்னு என்றில்லாமல் ,  இந்தப் புத்தகமும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்கிறது , காட்சிகளின் இணைப்புகள் , கூடுதல் தகவல்கள் என ஆங்காங்கே  சுருக்கமாகவும் கொஞ்சம் விளக்கமாகவும் ஒவ்வொரு திரைப்படத்தின் பின்னணியையும், அதன் சமூக, அரசியல், கலாச்சார அடுக்குகளையும் எளிதாக அறிமுகப்படுத்துகிறது. 

ஒரு சிலர் படத்தின் தலைப்பை பார்த்து முதலில் பார்த்துவிட்டு பிறகு கட்டுரை வாசிப்பார்கள் , சிலர் படித்துவிட்டு தான் படமே பார்ப்பார்கள் அவரர் விருப்பம் போல செய்யலாம் தப்பில்லை.

புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பல படங்களை நான் ஏற்கனவே பார்த்திருந்தாலும், எழுத்தாளர் தேர்ந்தெடுத்திருக்கும் திரைப்படங்களின் பட்டியல் மிகவும் சிறப்பாக இருந்தது. உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் ஒரு நல்ல தேர்வாகவே இது தெரிகிறது. ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு நாட்டின் வாழ்க்கையையும், மனிதர்களின் உணர்வுகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளையும் வெவ்வேறு கோணத்தில் நமக்குக் காட்டுகின்றன.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது எழுத்தாளர் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் படங்களையும், MUBI போன்ற தளங்களில் வெளியாகும் உலகத் திரைப்படங்களையும் தொடர்ந்து பார்த்திருப்பார் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அந்த அனுபவம் அவருடைய எழுத்தில் பிரதிபலிக்கிறது.

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் போர்டு மாதிரி, நல்ல உலக சினிமா பார்க்க வேண்டும். என்பது சுருங்கி கொண்டே வருகிறது நல்லாவே  கண்கூட தெரிகிறது. எதையாவது கிண்டி வைத்து மனிதத்தை மற்றும் அன்பை கடத்துகிறேன். காதலை அள்ளி தெளிக்கிறேன் , ரத்த வெள்ளத்தில் சண்டை செய்கிறேன் , மாஸ் பண்ணுகிறேன் , சாமிய கண்ணுல காட்டுறேன் என பல நேர கடத்தல்கள் தான் அதிகம் தற்போது உலா வருகிறது  ஆகையால் உங்கள் ரசனைக்கு தீனி போடக்கூடிய சில படங்களை  , இந்த மாதிரி சமயத்தில் நீங்கள்  அப்ப்ப தேடி கண்டடைவது மனதுக்கும், உடலுக்கும், ரசனைக்கும் நலம் அது உங்களுக்கு சிரமமாக கூட இருக்கலாம் அப்படிப்பட்டோருக்கு இதுபோல  புத்தகத்தை வாங்கி டக் ன்னு எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு பக்கத்தை புரட்டு அந்த கட்டுரையிலிருந்து   தொடங்கலாம்.

மொத்தம் 30 படங்கள் சாம்பிளுக்கு சில படங்களின் பெயரை சொல்கிறேன்.  

  • Yellow Cat
  • Son of Saul
  • Homeward
  • Joyland
  • The Blue Caftan
  • What Will People Say
  • Utama 
  • Dogman

இவற்றில் சில திரைப்படங்கள் உங்கள்  மனதில் நீண்ட நாட்கள் நிற்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். 

வாரத்திற்கு ஒரு படம் என்ற கணக்கில் பார்த்தாலே, ஒரு ஆண்டுக்குள் உலகின் பல நாடுகளின் திரைப்பட மொழியையும், மனித வாழ்வின் பல பரிமாணங்களையும் அறிந்துகொள்ள அவர்களோடு உங்களாலும்  பயணிக்க முடியும். புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் தேடினால் கிடைத்துவிடும். கிடைக்காமல் சிரமப்படுபவர்கள் என்னிடம் கேளுங்கள். என்னால் முடிந்தவரை அந்தத் திரைப்படங்களைப் பார்க்க உதவுகிறேன்.

இதுபோல இன்னும் சில புத்தகங்கள் வரவேண்டும் என  எதிர்பார்க்கிறேன் இந்த புத்தகம் இன்னும் பல வாசகர்களை உலக சினிமாவை நோக்கி அழைத்துச் செல்லட்டும். மனமார்ந்த வாழ்த்துகள்!

முடிவில் ஒரு சம்பவம் 

மதிய உணவு நேரம் , அலுவலக நண்பர் ஒருவருடன்  பேசிக்கொண்டு இருக்கும் பொழுது உலக சினிமாவில்  நான் பார்த்த சில படங்களை பற்றி சொல்லி அவரின் ஆர்வத்தை கிளப்பி விட்டுக்கொண்டு இருந்தேன். 

படம் ஒன்னு Bauryna Salu என்பது கசாக் சமூகத்தில் இருந்த ஒரு பழைய மரபை மையமாகக் கொண்ட படம். குழந்தை இல்லாத உறவினர்களிடம் ஒரு குழந்தையை வளர்க்கக் கொடுக்கும் வழக்கம் "Bauryna Salu"  அன்புக்காக உருவான அந்த மரபு, வளர்ந்த பிறகு தனது உண்மையான அடையாளத்தையும், சொந்த குடும்பத்தையும் தேடும்  மனப்போராட்டமாக மாறும் , மூத்த குழந்தையை தாத்தா பாட்டிகளுக்கு தத்து கொடுத்துவிடுவது வழக்கமான கிராமத்தில் பிறந்த சிறுவன் பிறந்து ஒரு வருடம் முடிந்தவுடன் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறான் பெரும்பாலும் தனிமை, அவனுக்கு ஒரு ஆசை நிறைவேறியதா இல்லையா?

இனொன்று 

Ala Kachuu - Take and Run கிர்கிஸ்தானில் இன்னும் சில இடங்களில் நடைபெறும் "மணப்பெண்ணைக் கடத்தி திருமணம் செய்வது" (Bride Kidnapping) என்ற பழக்கத்தை மையமாகக் கொண்டது. தனது கனவுகளை நோக்கிச் செல்ல விரும்பும் ஒரு இளம் பெண், அந்தக் கொடூரமான மரபின் பலியாகும் போது அவளுடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது  பழமைவாதத்தின் தாக்கம் ஆகியவற்றைப் பேசும் முக்கியமான குறும்படம்.

இந்த இரண்டு படங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில்தான் '21 ஆம் நூற்றாண்டின் திரைமொழி' புத்தகத்துக்கான கொரியர் என் கைக்கு வந்தது.  ஆர்டர் போட்டு 15 நாளுக்கு மேலே இருக்கும் திடீரென வந்தது அதை கொஞ்சம் புரட்டி இதிலுள்ள சில படங்களை பற்றி சொன்னவுடன்  அவர், "எனக்கும் ஒரு பிரதியை வாங்கித் தாருங்கள்; படித்துவிட்டு அவர் அவருடைய நண்பருக்கு  பரிசாகக் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார் , ஆக இப்படியாவது உங்கள் நண்பர்கள் சிலரை நல்ல உலக சினிமாக்குள் இழுத்துவிட்டு விடுங்கள் 


நன்றி.


Post a Comment

Previous Post Next Post