Bad Roads (2020,Ukraine) - Film Intro By Tamil | மோசமான சாலைகளில் மனிதநேயம்

போர்கால சமயத்தில் இந்த டான்பாஸ் ரோடு பகுதியில் நடக்கும் நான்கு வெவ்வேறு சம்பவங்களை குறும்படங்களாக தொகுத்து வந்திருக்கும் ஒரு அந்தாலஜி திரைப்படம்தான் இது . நான்கும் வெகு இயல்பானவை , ரொம்ப உணர்வுபூர்ணமானவை , குறிப்பாக உண்மைக்கு நிகரானவை . ரொம்பவே யதார்தமானவை அவசியம் நண்பர்கள் பார்க்க பரிந்துரை செய்கிறேன் . 



ஏற்கனவே மேடை நாடகமாக வெற்றிபெற்று திரைப்படமாக்கப்பட்டிக்கிறது . இந்த மோசமான சாலைகளில் மனிதநேயம் எந்தளவிற்கு உள்ளது என்பதை நமக்கு கண் கூடாக காட்டியிருக்கிறார் இயக்குனர் . பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை ,  தனது அதிகாரத்தின் மூலம் மற்றவரை அடக்குதல் , விரும்பிய ஒருவருக்கான காத்திருப்பு ,காதல் , பயம்,  குடும்ப உறவுகள் , கொடுமை படுத்துதல் , வன்முறை என ஆங்காங்கே தொட்டுவிட்டு சென்றுள்ளார்கள் . 


சாதாரண நாள்களில் கூட நாம் எதோ ஒரு மன குழப்பத்திலோ அல்லது தீர்க்க யோசனையிலோ  இருப்போம் . என்ன செய்கிறேன் என்ன செய்ய போகிறேன் என்பதெல்லாம் நமக்கே சரியாக தெரியாது . உதாரணத்திற்கு லாக் டவுன் சமயத்தில் ஒவ்வொருவரின் நிலைப்பாடும் , எண்ணங்களும் , மன குழப்பங்களும் அதிகம்  இதுவே நாம் ஒரு போர் சூழலில் இருக்கும் சமயத்தில் நம் மனநிலை எப்படி இருக்கும் . அப்படிப்பட்ட சூழலில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சில சம்பவங்களை காட்சிகளாக்கினால் ? 

உதாரணத்திற்கு உங்கள் கையில் ஒரு பேப்பரையும் பேனாவையும் கொடுத்துவிட்டு, உங்கள் தெருவில் அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியில் என்ன நடக்கிறது என்பதனை, பார்த்துக்கொண்டே , நீங்கள் பார்ப்பதை  அப்படியே எழுதி அதனை யதார்த்தமாக திரையில் காட்சிகளாக கொண்டுவந்தால் எப்படி இருக்கும் . அப்படிதான் இருந்தது திரைப்படம் .  இதில் மூன்றாவது கதை மிக முக்கியமான கதை அதுதான் கொஞ்ச நேரம் அதிகமாக ஓடும் , அதற்கு பிறகு மற்ற கதைகள் பிடித்தது . 


தமிழ் திரைப்பட விரும்பிகளுக்கு அந்தாலஜி திரைப்படங்கள் பிடிக்கும் என நினைக்கிறன் . ஏற்கனவே அர்ஜென்டினா நாட்டிலிருந்து வெளிவந்த Wild Tales என்ற திரைப்படத்திற்கு பலதரப்பட்ட ரசிகர்கள் கொண்டாடியதை  காண முடிந்தது . ஹாரர் Sub Genre ஆன Revenge வன்முறையை மிக சிறப்பாக ஒவ்வொரு கதையிலும் அட்டகாசமாக காண்பித்திருப்பார்கள் . அதே போலவே எனக்கு இந்த உக்ரேயின் நாட்டு படமும் மிகவும் பிடித்திருந்தது .   இதில் முழுக்க முழுக்க போர் கால சமயங்களில் நடக்கும் நான்கு வெவ்வேறு சம்பவங்கள் இந்த நான்கு கதைகளுக்கும்  சாலைக்கும் சிறு தொடர்பாவது நிச்சயம் இருக்கும் . 

முதலாவது 

கவனுக்குறைவாக மற்றும் மது போதையில் இருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், தவறான அடையாள அட்டை ஒன்றை வண்டியில் வைத்துக்கொண்டு ராணுவ பாதுகாப்பு எல்லையை கடக்கும் நேரத்தில் மாட்டிக்கொள்கிறார் , அங்கே துப்பாக்கி ஏந்திய இரு ராணுவ வீரர்களுக்கும் இவருக்கும் நடக்கும் உரையாடல் தான் முதல் கதை . 


இரண்டாவது 

மாலை நேரத்தில் தனது ஆண் நண்பரை காண பஸ் ஸ்டாப் ல் அமர்ந்து கொண்டு அந்த ரோட்டையே பார்த்துக்கொண்டு இருக்கிறாள் ஒரு டீன் ஏஜ் பெண்  . மாலையில் இருந்து இரவு வரை  காத்திருக்கும் நாயகி . ராணுவத்தில் பயிற்சி பிரிவில் இருக்கும் நாயகன் . இவ்வளவு நேரம் ஆகியும்  அவனை காணவில்லை  அவனை பார்த்துவிட்டு தான் செல்ல வேண்டும் என காத்திருக்கிறாள் . இதற்கிடையில் நாயகியின் பாட்டி நீ வீட்டுக்கு வரலை ன்னா அவன் உன்னை கற்பழிக்க முயற்சி பண்ணான் ன்னு மிலிட்டரில சொல்லிவிடுவேன் ன்னு சொல்கிறார் . இருவருக்கு இடையில் நிகழும் சுவாரசியமான பேச்சு வார்த்தைகள் தான் இந்த இரண்டாவது குறும்படம் . 


அடுத்த இரண்டு கதைகள் மிகவும் சுவாரசியமானவை அதை பற்றி எதுவுமே தெரிந்துகொள்ளாமல் பார்ப்பது நல்லது என்பதனால் , இத்தோட முடித்துக்கொள்கிறேன் .  18 வயது கடந்தவர்கள் தாராளமாக பார்க்கலாம் . எப்படியாவது இந்த போராட்ட அதிகார  உலகில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டுமடா .. அமைதியை மட்டுமே நானும் விரும்புகிறேன் . 

உக்ரைன் டிவி சீரீஸ்கள் மேடை நாடகங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றிய  Natalya Vorozhbit பெண் இயக்குனரின் முதல் திரைப்படம் இது .  94 வது Academy Awards சிறந்த வெளிநாட்டு பிரிவில் போட்டியிட்டது  . போன வருடம் 93 ல் Atlantis என்ற திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது அந்த இயக்குனரின் Reflections திரைப்படம் தான் ஆஸ்கார் ல் பங்குகொள்ளும் என நினைத்தேன் . ஆனால் இந்த திரைப்படம் வந்திருப்பது ஆச்சர்யம் தான் . ஒவ்வொரு கதையும் சுவாரசியம் அதிலும் மூன்றாவது படபடப்பை கிளப்பி விடும் . வாய்ப்பு அமைந்தால் தேடிப்பிடித்து பாருங்கள் . நான்கு குறும்படங்களை கொண்ட இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு மேடை நாடகமாகவும் வெளிவந்திருக்கிறது . அந்த நாடகத்தின் ட்ரைலர் இணையத்தில் காணக்கிடைக்கிறது .

முறையாக இந்த திரைப்படம் இந்தியாவில் எங்கும் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகவில்லை , வந்தால் அவசியம் சொல்கிறேன் . 



Post a Comment

Previous Post Next Post