அன்று விடுமுறை நாள்.
விழித்தவுடனே தலை சற்று கனமாக இருந்தது. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. ஆனால் உடல் படுக்கையை விட்டு எழ மனமில்லை. சில நாட்கள் சோம்பல் உடலில் வருவதில்லை; மனதில் வருகிறது. அது அப்படிப்பட்ட நாள்.
ஒரு மாதத்திற்கும் மேலாக என்னை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் அன்றும் நினைவுக்கு வந்தது.
நான் சந்தா செலுத்தியிருந்த "திரைவானம்" என்ற இணையத் திரைப்பட சேவையில் எனக்கு தேவையான துணை எழுத்துகள் வரவில்லை. முதலில் பொறுமையாக வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டேன்.
"இருபத்திநான்கு முதல் நாற்பத்தெட்டு மணி நேரத்தில் சரியாகிவிடும், சார்."
என்றார்கள்.
நானும் நம்பினேன்.
ஆனால் நாற்பத்தெட்டு மணி நேரம் ஒரு வாரமாகியது. ஒரு வாரம் இரண்டு வாரங்களாகியது. இரண்டு வாரங்கள் மாதமாகியது.
ஒவ்வொரு முறையும் புதிய குரல்.
ஒவ்வொரு முறையும் புதிய பெயர்.
ஆனால் ஒரே பதில்.
"உங்கள் பிரச்சினை எங்கள் தொழில்நுட்பக் குழுவிடம் அனுப்பப்பட்டுள்ளது, சார்."
"சற்று பொறுமையாக இருங்கள், சார்."
"உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், சார்."
ஒரு கட்டத்தில் அந்த வார்த்தைகள் மனிதர்களின் குரலாகத் தெரியவில்லை. ஒரே டேப்பை மீண்டும் மீண்டும் இயக்கும் இயந்திரம் போலத் தோன்றின.
இதற்கிடையில் நான் நேரடியாக அந்த சேவை நிறுவனத்திற்கே மின்னஞ்சல் அனுப்பினேன்.
அவர்களிடமிருந்து வந்த பதில் என்னை இன்னும் எரிச்சலடையச் செய்தது.
"நீங்கள் எங்களிடம் நேரடியாக சந்தா எடுக்கவில்லை, சார். மற்றொரு சேவையின் வழியாக வந்திருக்கிறீர்கள். நாங்கள் துணை எழுத்துகளை அனுப்பிவிட்டோம். அவர்கள் அதை உங்களுக்கு வழங்க வேண்டும். அவர்களைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும்."
என்றார்கள்.
நான் யாரைத் தொடர்பு கொள்வது?
பணம் என்னிடமிருந்து போயிருந்தது.
பிரச்சினை என்னிடம்தான் இருந்தது.
ஆனால் பொறுப்பு மட்டும் ஒவ்வொருவரிடமிருந்தும் அடுத்தவரிடம் பயணம் செய்து கொண்டிருந்தது.
அந்தப் பயணத்தின் கடைசி நிலையத்தில் நான் இருந்தேன்.
அன்று மீண்டும் அழைத்தேன்.
மறுமுனையில் ஒரு பெண் பேசினாள்.
வழக்கமான வரவேற்பு.
வழக்கமான மன்னிப்பு.
வழக்கமான உறுதி.
என்னுள் ஒரு மாதமாகச் சேர்ந்திருந்த எரிச்சல் வார்த்தைகளாக வெடித்தது.
"நீங்கள் சொல்றதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க."
"உனக்கு இந்த வேலைக்கு யார் பயிற்சி கொடுத்தாங்க?"
"நீ என்ன AI-ஆ?"
"பழைய டேப் ரெக்கார்டர் மாதிரி அதையே சொல்லிக்கிட்டே இருக்கிற."
அவள் அமைதியாகப் பதிலளித்தாள்.
"சார், என்னால் முடிந்ததைச் செய்கிறேன்."
அந்தப் பதில்தான் என்னை இன்னும் கோபப்படுத்தியது.
"எதுவுமே செய்யல!"
என்று நான் சத்தமாகச் சொன்னேன்.
என் பணம் பற்றியும் பேசினேன்.
என் உழைப்பு பற்றியும் பேசினேன்.
"உன் பணத்தில் நான் இதை வாங்கவில்லை . என்னுடைய உழைப்பில் சம்பாதித்த பணத்தை இப்படி வீணாக்குறது நியாயமா?"
என்று கேட்டேன்.
அவள் மீண்டும் ஏதோ சொல்ல முயன்றாள்.
ஆனால் அந்த முறை அவளது குரலில் ஒரு சிறிய நடுக்கம் இருந்தது.
முதலில் கவனிக்கவில்லை.
மீண்டும் பேசினேன்.
கடுமையாக.
பிறகு சில நொடிகள் அமைதி.
அந்த அமைதிக்குள் ஒரு சத்தம் இருந்தது.
அழுகையை மறைக்க முயலும் ஒரு மனிதனின் சத்தம்.
என் வார்த்தைகள் திடீரென்று என்னையே வந்து குத்தின.
ஒரு மாதமாக நான் போராடியது ஒரு நிறுவனத்துடன்.
ஆனால் கடந்த பத்து நிமிடங்களாக நான் தாக்கிக் கொண்டிருந்தது அந்த நிறுவனத்தை அல்ல.
ஒரு மனிதரை.
எங்கோ ஒரு நகரத்தில், தனது வேலை நேரத்தை முடிக்க காத்திருக்கும் ஒரு பெண்ணை.
அவளுக்கு இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் அதிகாரம் கூட இல்லாமல் இருக்கலாம்.
அவள் பயிற்சியில் கற்றுக்கொடுத்த வார்த்தைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
என் கோபத்திற்கும் அவள் சம்பளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஆனால் என் கோபத்தின் முழுச் சுமையும் அவள் தோளில்தான் விழுந்திருந்தது.
"சாரி."
என்று மெதுவாகச் சொன்னேன்.
"உங்களை காயப்படுத்தணும்னு நான் பேசல."
"இந்தப் பிரச்சினையால்தான் கோபம் வந்துச்சு."
அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
பயிற்சியில் கற்ற வார்த்தைகளையே மீண்டும் சொன்னாள்.
அதே நடை.
அதே சொற்கள்.
ஆனால் இப்போது அவை வேறுவிதமாகக் கேட்டன.
அதற்குப் பின்னால் ஒரு மனிதக் குரல் இருந்தது.
அழுகையை விழுங்கிய ஒரு பெண்ணின் குரல்.
இதற்கிடையில் அவள் பேசுவது எனக்கு புரியவில்லை என்றேன் அப்போது உங்களுக்கு எந்த மொழியில் பேச வேண்டும் என்று சொன்னால் அதை உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னேன், அதற்கும் மன்னிப்பு கேட்டேன் பேசிய அனைத்தும் ஆங்கிலத்தில் நடந்த உரையாடல் எனக்கும் கண்ணீர் வந்தது. அழைப்பும் முடிந்தது. அதன் பிறகு
பிரச்சினை தீரவில்லை.
பணம் திரும்ப வரவில்லை.
துணை எழுத்துகளும் வரவில்லை.
ஆனால் அந்த நாளில் வேறு ஏதோ ஒன்று சரியாகி இருந்தது.
ஒரு மாதமாக நான் மறந்து போயிருந்த உண்மை ஒன்று.
தொலைபேசியில் நாம் கேட்பது குரல் மட்டுமல்ல.
அதன் மறுமுனையில் நம்மைப் போலவே சோர்வடையும், நம்மைப் போலவே உடைந்து போகும், நம்மைப் போலவே அழும் ஒரு மனிதரும் இருக்கிறார்.
அந்த நாளுக்குப் பிறகு எந்த வாடிக்கையாளர் சேவை எண்ணையும் அழைக்கும் முன், மறுமுனையில் இருக்கும் குரலுக்கொரு முகத்தை நான் கற்பனை செய்து கொள்கிறேன்.
அந்த முகம் பெரும்பாலும் அவளுடையதுதான்.

Post a Comment