ஆறாம் வகுப்பு படிக்கும் பத்து வயது மாணவன் தினமும் பள்ளிக்கு 7 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்துதான் பள்ளிக்கு வரவேண்டும் . பயணம் செய்ய சைக்கிளோ , போக்குவரத்து வசதியோ சரியாக இல்லை , அப்படியே வண்டியில் ஏறி பயணம் செய்து வந்தால் பள்ளியை வந்தைடைய நாள் கணக்காகி விடும் . மலைகளின் மீது ஏறி இறங்கி , மீண்டும்.. மீண்டும் ஏறி இறங்கி வரவேண்டும் . இங்குதான் அவர்கள் வீட்டுக்கு வீடு ஒரு கழுதை வளர்க்கிறார்கள் . அதன் மீது அமர்ந்து கொண்டு பள்ளிக்கு வரலாம் . பள்ளியை முடித்துவிட்டு மீண்டும் அதன் மேல் அமர்ந்து கொண்டு வீட்டுக்கு செல்லலாம் . வீட்டுக்கு வந்ததும் அங்கும் சிறு சிறு வேலைகளை செய்ய வேண்டும் .
தேர்வு நாள்கள் துவங்கி விட்டன . தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் சமயத்தில் தனது நெருங்கிய நண்பனின் நாற்காலியை எதிர்பாராத விதமாக உடைத்து விடுகிறான் சிறுவன் . இது நிச்சயம் அவனது நெருங்கிய நண்பனுக்கு எதாவது ஒரு வருத்தத்தை விளைவிக்கும் என்ற நோக்கில் உடைந்த நாற்காலியின் மீது ஒரு துணியை வைத்து கட்டிவிடுகிறான் . இருந்தும் மனம் கேர்க்காமல் அதனை கழுதை மேல் ஏற்றி மலை இடுக்கில் மறைத்து வைக்கிறான் . வீட்டிற்கும் தெரியாமல் , நண்பனுக்கும் தெரியாமல் அந்த நாற்காலியை சரி செய்து தேர்வுக்கு முன்பு அங்கே வைத்துவிட வேண்டும் என முயற்சி செய்கிறான் . அவன் முயற்சி என்ன ஆனது என்பதுதான் இந்த லடாக்கி மொழி திரைப்படம் . படத்தில் நடித்தவர்கள் எல்லாம் அங்கே வசிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல அப்படியே ஒன்றிவிட்டார்கள் . 6 வது படிக்கும் சிறுவன் ஜாப்பனீய பெண்ணிடம் பேசும் ஆங்கிலம் ஆச்சர்யப்பட வைக்கிறது . கல்வியின் முக்கியத்துவத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது .
உலக சினிமாக்கள் பார்ப்போருக்கு நான் சொல்ல போகும் பெயர் நிச்சயம் பரிச்சயமாகி இருக்கும் என நம்புகிறேன் . படத்தின் தொடக்கத்திலே அப்பாஸ் கியாரோஸ்தாமிக்கு அர்ப்பணிப்பு செய்கிறேன் என்பது போல ஒரு சில வரிகள் வந்தது . அப்படியென்றால் அவரின் தாக்கமும் ஈரான் படங்களின் தாக்கமும் நிச்சயம் இருக்கும் என்பதனை மனதில் வைத்துக்கொண்டேன் . படத்தை பற்றி எதுவுமே தெரிந்துகொள்ளாமல் தான் பார்த்தேன் . இது சிறுவர்களுக்கான திரைப்படம், குழந்தைகளுக்கான திரைப்படம் என நிச்சயம் உங்களால் சொல்லிவிட முடியாது. எல்லோரையும் கவர்ந்து விடக்கூடிய விதமாக படமாக்கப்பட்டு இருக்கிறது . காட்சிகளில் கூட ஈரானின் தாக்கம் இருக்கிறது என தேடிப்பார்த்தால் ஒளிப்பதிவு செய்தவர் ஈரான் நாட்டை சேர்ந்தவர் . லடாக் மலைப்பகுதியை அவ்வளவு அழகாக காட்சி செய்திருந்தார் .ஒளிப்பதிவிற்க்கென போலந்து நாட்டில் நடத்தப்படும் கேமர்இமேஜ் திரைப்படவிழாவில் பங்குகொண்டது குறிப்பிடத்தக்கது .
சினிமாக்கள் பொதுவாகவே ஒவ்வொருமுறையும் எதாவது ஒன்றை அல்லது தனித்தன்மையை நம்மிடம் விட்டுச்செல்லும் , எதையாவது புதிதாக கற்றுக்கொள்ளலாம் , உண்மைத்தன்மையை புரிந்து கொள்ள உதவலாம் , உங்களிடம் ஒரு சிறிய மாற்றத்தை உண்டுபண்ணலாம் , அன்பை ஏற்படத்தலாம் , சொல்லப்போனால் உருப்படியாய் ஒன்றை செய்யலாம் அதை செய்யாமலும் போகலாம் , இந்த சிறுவயது நாள்கள் எல்லாம் மீண்டும் கிடைக்கவே கிடைக்காத வரம்தான் அப்படி எத்தனை எத்தனையோ கவனிக்கத்தக்க நாள்களை கடந்து வந்திருப்போம் , எல்லாம் நமக்கு நினைவிருக்குமா? என்று கேட்டால் நிச்சயம் இருக்காது . எங்கோ' யாரோ சொன்னதையும், கேட்டதையும், படித்ததையும் , பார்த்ததையும் தான் மீண்டும் மீண்டும் நினைவில் வைத்துக்கொண்டிருக்க முடியும் , ஆம் நீங்கள் சொன்னதில் எனக்கும் ஒரு கதை இருக்கிறது என அப்போதுதான் அது வெளிப்படும் . மற்றது எல்லாம் திரைப்படங்கள் வாயிலாக தான் உணர வைக்க முடியும் . அப்படி ஒரு திரைப்படத்தை பற்றித்தான் இன்று இதில் அறிமுகம் செய்துள்ளேன் . நிச்சயம் உங்களை கவரும் .
லடாக்கின் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை பார்க்க வேண்டுமா , சிறுவர்களின் பள்ளிப்பருவ நாள்களை பார்க்க வேண்டுமா , லடாக் மலைகளை ரசிக்க வேண்டுமா , இந்தப்படம் உங்களை ஆச்சரியப்படுத்தும் என நம்புகிறேன் . மக்களும் நிலப்பரப்பும் காட்சி மொழியில் கையாண்ட விதம் என்னை கவர்ந்தது . சிறுவனின் நடிப்பு அபாரம் . Praveen Morchhale வின் Widow Of Silence மற்றும் Barefoot To Goa 2013 பார்த்தவர்களுக்கு இயக்குனரின் இந்தப்படம் நிச்சயம் பிடிக்கலாம் .
நேற்றுதான் அழகிய மலை கிராம் தொடர்பான , உத்தரகாண்ட் மாநிலத்தில் முன்ஷியாரி படமாக்கப்பட்ட Fire in the Mountains (2021,India) திரைப்படத்தை பார்த்தேன் . அதன் தாக்கம் இன்னும் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்க இந்தப்படமும் கூடவே வந்து சேர்ந்துகொண்டுள்ளது . இரண்டும் இந்தியப்படங்கள் . உத்தரகாண்ட் பசுமை நிலப்பரப்பு மலையை காண்பித்து விட்டு இங்கே கரடு முரடான மலை பகுதியை பார்க்கும் பொழுது ஆச்சர்யமாக இருந்தது . இரண்டுக்கும் கிட்ட தட்ட 1400 கிலோமீட்டர் தூரம் இருக்கும் . வட இந்திய இமயமலையின் அழகியலை இரண்டு படங்களிலும் பார்த்து ரசிக்கலாம் .
தற்போது இந்த இரண்டு இந்தியப்படங்களும் இந்தியாவில் எந்த OTT களிலும் இல்லை என்பதனை தெரிவித்து கொள்கிறேன் . கொஞ்சம் தேடினால் அல்லது காத்திருந்தாள் உங்களுக்கு கிடைக்கலாம் . அடுத்த வேறொரு நல்ல படத்தில் சந்திக்கலாம் .
நன்றி
Post a Comment