2020 ஆம் ஆண்டு பெங்களூர் திரைப்படவிழா தொடங்கிய நாளில் எந்தவொரு முன்தகவலும் தெரியாமல் ஒரு திரைப்படத்திற்குள் நுழைந்தேன் . திரைப்பட விழாவின் சுவாரஸ்யமே அதுதான் ஒன்றிரண்டு படங்கள் இப்படி திடீரென நுழைய சந்தர்ப்பம் கிடைக்கும் . உள்ளே போன பிறகு உறங்க வைக்குமா இல்லை அதிர்ச்சியில் உறைய வைக்குமா என்பதெல்லாம் அந்த திரைப்படத்தின் பொறுப்பில் தான் உண்டு . பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அந்த படத்தின் பெயர் வெர்டிக்ட் கணவன் மூலம் வன்முறைக்குள் உள்ளாக்கப்பட்டு அடித்து கண்கள் வீங்கி முகமெல்லாம் ரத்தத்தோடு போலீஸ் ஸ்டேஷன் நுழைவதோடு தொடங்கும் படம் அது , ஓரு சாதாரண தொழியாளியின் குடும்பம் தொட்டு பெரிய வசதி கொண்டுள்ள வீட்டிலும் இதுபோல பிரச்னைகள் உண்டு . அந்த படம் முழுக்க முழுக்க ஒரு அந்த பெண்ணை சுற்றியே நகரும் , எனோ பலருக்கு இது பிடிக்கவில்லையா என தெரியவில்லை அங்கிருந்து பாதி படத்தில் அரங்கம் குறைந்துவிட்டது , நான் முழுதும் பார்த்துவிட்டு தான் வந்தேன் பிலிப்பைன்ஸ் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்து வெளிவந்த மிக அற்புதமான படம் , பெண்கள் மீதான நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதற்கான சட்டதிட்டங்கள் , பதியப்படும் குற்றங்கள் , வெளியே தெரிந்தால் பெரிய சிக்கல் ஆகிடுமோ என பதியப்படாத குற்றங்கள் , தற்காப்புக்காக கொலை செய்தல் என பல படங்கள் உலக திரைப்படங்களிலும் உண்டு . அந்தவகையில் நேற்று பார்த்த கஜகஸ்தான் நாட்டு படமான Happiness ஆரம்பம் முதல் இறுதி வரை மிக சிறப்பாக இருந்தது .
இருளிலிருந்து மீளும் வெளிச்சம் .....
கஜகஸ்தானில் வெறும் டார்க் காமெடி படங்கள் மட்டும் தான் வந்துகொண்டிருக்கின்றன என நினைத்தேன் . அங்கு உலக தரம் வாய்ந்த பெஸ்டிவல் திரைப்படங்களும் வருகின்றன என்பதை புரிந்துகொண்டேன் . இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சமாக ஒளிப்பதிவை குறிப்பிடலாம் , பிண்ணனி இசை கூடுதல் பலம் . நடித்தவர்களை பற்றி இணையத்தில் தேடினால் இந்த ஒரு படம் மட்டும் தான் இருக்கிறது . அப்போ இவர்களுக்கு இதுதான் முதல் படம் என்றால் நடிப்பில் வெறித்தனமாக நடித்துள்ளார்கள் . முக்கிய கதாபாத்திரங்களாக அனைவருமே சிறப்பு , இடையில் ஹிந்தி பாடலுக்கு நடமாடுவது , உரையாடல்கள் , பொட்டில் அடித்தார் போல வசனம் , என இயல்பிற்கு நிகரான ஒரு திரைப்படம் .
இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கண்ணாடி முன் நின்று தன்னை பார்க்கிறாள் , அழகான உடல் , அங்கங்கே சில சிறு தழும்புகள் , தாக்கப்பட்டு ஆறிப்போன காயங்களுக்கான அடையாளம் . அடுத்த நாள் விடிந்ததும் தனது மகளின் திருமண ஏற்பாடுகள் . விருப்பமில்லாமல் தான் மகளின் திருமணமும் நடக்கிறது . மறுநாள் நாள் வழக்கம் போல தனது வேலைக்கு செல்கிறார் . "மகிழ்ச்சி" என்றொரு நிறுவனம் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தி விற்கும் ஒரு பணிப்பெண் தான் இவர் .
ஒரு சுதந்திரமான சந்தோஷமான வாழ்க்கை ஒன்று இருக்கிறதென்றால் அது எங்கே எப்படி ? குறிப்பாக இந்த அழகுசாதன பொருள்கள் நம்மை மகிழ்ச்சியைட செய்யுமா ? கவர்ச்சியடைய செய்யுமா ?? கணவர்கள் நம்மை சந்தோசமாக வைத்துக்கொள்ள உதவுமா ?? பெண்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை வன்முறை ஒடுக்குமுறை அதிலிருந்து அவர்கள் தற்காத்து கொள்ளுதல் என பல செய்திகளை இணைய தகவல்களில் இருந்து தெரிந்துகொண்டு இருப்பீர்கள் இது கஜகஸ்தான் நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களின் தொகுப்பு தான் . என்னுடைய பட்டியலில் எப்போதும் இருக்க கூடிய சிறந்த திரைப்படமாக இது இருக்கும் .
ஒரு சில திரைப்படங்களை பார்க்கும் போது மட்டுமே பார்வையாளனுக்கு எழும் தீவிரமான கேள்விகளுக்கு ஆழமான பதில்களை தேட முயல்வர் , அப்படி இந்த திரைப்படத்தில் மகிழ்ச்சி எங்கே என்ற கேள்விக்கு போதுமானவரை பதில் தர முயற்சி செய்துள்ளார் இயக்குனர் . இருந்தும் பார்வையாளர்களாகிய நாமும் அந்த கேள்விக்கான பதிலை தேட ஆரம்பிப்போம் .
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து வெளிவந்துள்ள மிக முக்கியமான திரைப்படம் பட்டியலில் இதையும் இணைக்கலாம் . கணவன் மூலம் மனைவிக்கு நேரும் பிரச்னை , தனது மகளின் திருமணத்தில் தொடங்கும் பிரச்னை அதை தொடர்ந்து கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை , அவனிடமிருந்து விவாகரத்து பெற விண்ணப்பிக்கும் முடிவில் என்ன ஆனது ? என்ன நடந்தது என்பதெல்லாம் படத்தை பார்த்து தெரிந்துகொள்வது அவசியம் .
அன்றாடம் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களை விற்கும் நாயகி தினமும் தான் பணிபுரியும் நிறுவன பொருட்களை விற்பனை செய்ய ஒன்றை தொடர்ந்து சொல்கிறார் . அதாவது , நாம் இதை தொடங்குவதற்கு முன்பு உங்களின் கண்களை மூடிக்கொள்ளுங்கள் . முதலில் பயப்படாதீர்கள் பயப்படுவதற்கு எதுவுமே இல்லை இவுலகில் பெண்களே ! நீங்கள் யாரெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர்கள் என நினைக்கிறீர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள் . நல்லது . இப்போது யாரெல்லாம் ஏற்கனவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் உங்கள் கைகளையும் உயர்த்துங்கள் , நன்றி
மகிழ்ச்சி என்றால் என்ன ? இதுதான் மகிழ்ச்சி என்று எதை வைத்து தீர்மானிக்கிறீர்கள் ??
வருடங்களுக்கு முன்பு நானும் உங்களை போல மகிழ்ச்சியாக இருக்க போகிறேன் என நினைக்கவில்லை . உங்களால நம்ப முடியுதா ? சத்தியமா எனக்கு மகிழ்ச்சி என்றால் என்ன என்பதே தெரியாமல் இருந்தது . ஆனால் இந்த நிறுவனத்துல சேந்ததற்கு பிறகு எல்லாமே எனக்கு மாறிடுச்சு நீங்களும் என்னைப்போல மாறிவிடலாம் . மகிழ்ச்சியாக .. என பேசிக்கொண்டே இருக்கிறார் .
முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால் அங்கே அவளின் நிலை என்னவென்று நமக்கு புரியும் , கணவன் வேறொரு பெண்ணோடு உறவு வைத்துக்கொள்ளலாம் தப்பில்லை , ஆனால் மனைவி வைத்துக்கொண்டால் அவளை கொலை செய்ய தயங்க மாட்டான் . இந்த திரைப்படம் உங்களுக்கு ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்கனவே இதுபோன்ற பிரச்னைகளில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை துன்பமடைய செய்யலாம் இந்த படத்தை குறித்து விளக்கமாக பேசுவது சற்று கடினமான விஷயம் தான் ஆனால் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் .
2022 பெர்லின் திரைப்பட விழாவில் கலந்துகொண்டது ., திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது . வாய்ப்புள்ள சமயத்தில் கிடைக்கும் பொழுது அவசியம் பாருங்கள்
ட்ரைலர் இணைப்பு :
Post a Comment