Darkling (2022,Serbia) - Film Intro By Tamil | இருளில் மறைந்திருக்கும் உண்மை என்ன

இருளிருந்து ஒலிக்கும் ஒரு சிறுமியின் குரல் . தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கடிதத்தை சிறுமி  படிக்கிறாள்  அதில் நாட்டின்  தலைவருடன் பேசுகிறாள் . மதிப்பிற்குரிய ஐயா  நாங்கள் இங்கே பயந்துகொண்டு இருக்கிறோம் . என்னுடைய அம்மாவும் , தாத்தாவும் நானும் இங்கே வசிக்கிறோம் , இது எங்களுடைய வீடு அல்ல , எங்களின் வீடு செங்கல் கற்களால் ஆனது , அது எரிக்கப்பட்டது .இப்பொது நாங்கள் இங்கே கொசவன் பகுதியில் செர்பியர்கள் வாழும் பகுதியில்  வசிக்கிறோம் . பெரும்பாலான நேரங்களில் நாங்கள் இருளிலும் சிறு மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் தான் வாழ்கிறோம் . இருளால் சூழப்பட்ட எங்களுக்கு மெழுகுவர்த்தி வெளிச்சம் அந்தளவிற்கு ஆறுதலை தரவில்லை  . நாங்கள் தினமும்  பயப்படுகிறோம் . காணாமல் போன தந்தையும் மாமாவும் திரும்பி வரவேண்டும் என சொல்லிக்கொண்டு இருக்கிறாள் . திடீரென  வெளியே ஒரே சத்தம் கதவை திறந்துகொண்டு சென்று பார்த்தால் அவர்களின்  கன்றுக்குட்டி கம்பி வேலிகளில் சிக்கி இறந்து கிடக்கிறது.



இதனை செய்தது நிச்சயம் அவர்களாகத் தான் இருக்கும் என தாத்தா பதறியபடி இங்கும் அங்கும் அலைகிறார் , நம்மை நிச்சயம் இங்கே வாழவிடமாட்டார்கள்  என புலம்பிக்கொண்டே அடுத்த  நடைமுறைகளை செய்து கொண்டிருக்கிறார் தாத்தா ? அங்கே இத்தாலி நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் இரண்டு பேர் டாங்கரில் வந்து இறங்குகிறார்கள் . அவர்களிடம் இது பற்றி சொன்னால் நிச்சயம் இது உங்களின் கற்பனையாக இருக்கலாம்  , பிரம்மையாக இருக்கலாம் , உங்களை பாதுகாக்க தான் நாங்கள் இங்கே இருக்கிறோம் . இது நிச்சயம் ஒரு காட்டு விலங்கின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என இந்த நிகழ்வை பெரிதாக எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள் . ராணுவ அதிகாரிகள் விசாரித்து விட்டு அந்த பெண்ணை பள்ளிக்கு அழைத்து செல்கிறார்கள் . 


போருக்கு பிறகு அமைதி காக்கும் ராணுவப் படையின் நட்டோ மற்றும் UN அமைப்புகளின்  கீழ் இயங்கும் வடக்கு பகுதியில், எஞ்சியிருக்கும் சிறு சிறு செர்பிய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் . அவர்களுக்கு பாதுகாப்பு பகலில் ராணுவ வீர்கள் மூலம் கிடைக்கிறது. ஆனால் இரவில் அவர்களுக்கு நேரும் பல பிரச்னைகளுக்கு யாரும் உதவிக்கு வருவதில்லை , அவர்களுக்கு எதாவது நடந்தால் உதவிக்கு அழைக்க விசில் சத்தத்தை எழுப்ப வேண்டும் என்பதை சொல்லி கையில் ஒரு விசிலையும் கொடுக்கிறார்கள் . அந்த வீட்டில் இரவு அனைத்து கதவுகளும் ஜன்னல்களும் மரக்கட்டைகளால் அடைக்கப்படுகிறது , பகலில் மீண்டும் அதனை பிரித்து எடுக்கிறார்கள் .  இதுவே தொடர்கிறது .  இரவில் அங்கே வந்து அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் தருபவர்கள்  யார் ? 



இந்த சிறுமியை  அந்த டேங்கரில் அழைத்து செல்லும்போதுதான் தெரிகிறது  .  அந்த பகுதியில் வசிக்கும் அத்தனை வீடுகளும் வேலி போடப்பட்டு இருக்கிறது , எங்கும் எதாவது ஒரு உயிரினம் இறந்து கிடக்கிறது . பள்ளிக்கு மொத்தமே 6 குழந்தைகள் தான் வருகிறார்கள் . அதிலும் மூன்று பேர் கூடிய விரைவில் நின்று விடுவார்கள் என தெரிகிறது . இதே நிலை அவர்களுக்கு நீடித்ததா ? பிரச்னைகளில் இருந்து மீண்டார்களா ? இதனை செய்வது யார் ? அவர்களுக்கு அந்த இருளிலிருந்து வெளிச்சம் கிடைத்ததா? தந்தையும் மாமாவும் திரும்பி வந்தார்களா ? போன்ற கேள்விகளுக்கு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட  படத்தில் பதிலுண்டு  ?


இதற்கு முன்பு நீங்கள் Enclave என்ற அதி அற்புதமான ஒரு படத்தை பார்த்திருந்தீர்கள் என்றால் உங்களால் இந்த கொசவன் , செர்பியன் வரலாற்றையும் , போர் பின்ணணியும் மக்களின்  நிலையையும் கொஞ்சம் புரிந்துகொள்ள முடியும் . அல்பேனிய மொழி பேசும்  இஸ்லாமிய மக்களை செர்பிய கிறித்தவர்கள் தன் வசப்படுத்துவதா என்ற ஆத்திரத்தில் நடந்தேறிய பல  பல சம்பவங்கள்  பல்வேறு  உயிர்களை வாங்கியது , செர்பியர்களும் அவ்வளவு சாதாரணவர்கள் இல்லை  . பலர் தங்களின் இருப்பிடத்தை விட்டு சென்றனர் . செர்பிய மக்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் கூட கொசவன் மக்களின் பகுதியை தாண்டித்தான் அதுவும் ராணுவ டேங்கரில் தான்  செல்ல  வேண்டும் . இப்படி இருக்கையில் உடல்நலக்குறைவாக இருக்கும் வயதான செர்பியாவை சேர்ந்தவர் ஒருவர் இறந்துவிடுகிறார்  . அவரின் பிணத்தை எடுத்து செல்ல வரும் பிரச்சனை பல பார்வைகளின் கோணத்தில் காட்சி படுத்தி இருப்பார்கள் . சினிமா ரசிகர்கள் தவற விடவே கூடாத படமது . Enclave படத்தை அவசியம் பார்க்குமாறு பரிந்துரை செய்கிறேன் . அதை பார்த்துவிட்டு இந்த டார்க்லிங் படத்தையும் பாருங்கள் . 


நேரமிருந்தால் அவசியம்  செர்பியா , கொசாவா மற்றும் அல்பேனியா  , இவர்களுக்கு என்ன பிரச்னை , என்ன உள்நாட்டு போர் , எப்படி 7 ஆக பிரிந்தார்கள்  என்பதனை இணையத்தில் தேடி வரலாறை கொஞ்சமாவது தெரிந்துகொண்டு பார்த்தல் இன்னும் சிறப்பாக விளங்கும் உங்களுக்கு. அதனால் அவசியம்  இணையத்தில் தேடி படித்து  தெரிந்துகொள்ளுங்கள் . எந்த பின்புல கதையும் தெரியாமல் பார்ப்பது நிச்சயம் உபயோகமில்லை , அவசியமா என மீண்டும் கேட்டால் அவசியம் தான் இல்லையென்றால் உங்களுக்கு புரியாது . 


சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பார்வையாளர்களின் பாராட்டை பெற்றுள்ளது . கடைசி 30 நிமிடங்கள் எல்லாம்  அலற விட்டு இருக்கிறார்கள் . க்ளைமேக்ஸ் எல்லாம் எதோ ஒரு ஹாலிவுட் ஹாரர் சர்வைவல் த்ரில்லர் படம் பார்ப்பது போன்ற உணர்வு . மற்ற முதல் பகுதி காட்சிகளெல்லாம் உலக திரைப்பட விழா அனுபவம்  தான் .அப்புறம் நான் இதில் கொடூரமான திகிலை எதிர்பார்த்தேன் , ரத்தக்களரியான காட்சிகளை தேடினேன் என சொல்வோர் தயவுசெய்து பார்க்காதீர்கள் . உங்களுக்கு வேறு படங்களின் லிஸ்ட் வரும் . 



போர் சம்மந்தப்பட்ட கதைகள் , போருக்கு பிறகான கதைகள் போன்றவற்றை குழந்தைகள் , சிறுவர்   சிறுமியர் பார்வையில் சொல்லப்படும் பொழுது அவர்களின் கடுமையான நிலைமையை நம்மால் யூகித்து கூட பார்க்க முடியாது . இதற்கு முன்பு நம் தளத்தில் எழுதிய , Anna's War (2018,Russia) என்ற படம் என்னை அதிக அளவு பாதித்தது . 6 வயது Anna வின் பார்வையில் அவளுக்கு நேர்ந்த சம்பவத்தை படமாக்கி இருப்பார்கள் . கொடுமையான ஒன்று .  மற்றும் போர் சமயத்தில் பின்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்கு அனுப்பட்ட 70000 குழந்தைகள் பற்றிய சம்பவத்தை கொண்டு ஒரு சிறுவனின் பார்வையில் பார்த்த Mother Of Mine (2005,Finland) படமும் ரொம்பவே பாதித்தது . மேலும் ஜார்ஜியா நாட்டு படமான தந்தையை தேடி ஆபத்தான ராணுவ வீரர்கள் பகுதியை கடந்து செல்லும் ஒரு சிறுவனை பற்றி படமாக்கி இருப்பார்கள் அதை பற்றி  இங்கே படிக்கலாம் The Other Bank (2009,Georgia)  


மிலிகாவாக சிறுமியின் நடிப்பு அபாரம் . சிறுமிக்கு தாயக நடித்தவரின் இரண்டு படங்களை  ஏற்கனவே  பார்த்திருக்கிறேன் , Out Stealing Horses (2019, ) என்ற நார்வே நாட்டு படத்தில் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி இருப்பார் . . தந்தை காதலிக்கும் அதே பெண்ணை மகனும் காதலிப்பான் , இந்த சிக்கலான கதையமைப்பில் என்ன விஷயம் இருக்கிறது என்பதை அறிய  நீங்கள் படத்தை பார்க்கலாம் .  . இன்னொரு படம் Silent Heart 2014 என்ற படம் அது குறித்து விரைவில் ஒரு பதிவு எழுதுகிறேன் .. நேரமிருந்தால் அவசியம் நான் மேலே குறிப்பிட்ட அத்தனை படங்களையும் நீங்கள் தேடிப்பார்களாம் . உங்களின் நேரத்தை வீணாக்காது . 



நாட்டின் அமைதியை தான் நானும் விரும்புகிறேன் . போர் ஒரு சரியான தீர்வாக இருக்காது . நிச்சயம் அது பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் . கடவுள் , மதம் , இனம் , எல்லை , மண் , பொன் , செல்வம்  ,குறிப்பாக   மதத்தின் பெயரில் நடத்தப்படும் எதுவுமே எந்த ஒரு பைசா பலனையும் தராது அழிவை தான் கண்டுகூடாக்கும் , வாழும்வரை மக்களையும்,  உயிர்களையும்  நேசிப்போம் , அன்பை மட்டுமே வருங்கால உலகிற்கு கற்றுத்தருவோம் . கற்றுத்தாருங்கள் . 


நன்றி 

Post a Comment

Previous Post Next Post